Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பணி இன்றியமையாதது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கருதி தமிழ் நாட்டு இளைஞர்களிடையே தேசப்பற்றை வளர்த்து, அவர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சியோடு போராட வைத்தவர் முத்துராமலிங்கத் தேவர். அந்தக் காலக்கட்டத்தில் எண்ணற்ற இளைஞர்கள் முத்துராமலிங்க தேவரை பின்பற்றி சுதந்திர வேட்கையில் தன்னலமின்றி ஈடுபட்டனர். 

தன்னலமற்ற தியாகியாக திகழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இந்த கட்டுரையில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது! இக்கட்டுரையை முழுவதுமாக படித்து முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பல சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து பயன்பெறுங்கள்.

முத்துராமலிங்க தேவர் வரலாறு - Muthuramalinga Thevar History in Tamil

Muthuramalinga thevar history tamil

பிறப்பும் இளமையும் :

முத்துராமலிங்கத் தேவர் 1808 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று பிறந்தார். இவர் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் பிறந்தார். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது. இவரது தந்தையின் பெயர் உக்கிரபாண்டி தேவர் மற்றும் இவரது தாயாரின் பெயர் இந்திராணி அம்மையார் ஆகும். தேவருக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. இவரது குடும்பம் ஊரிலேயே மிகப்பெரிய கௌரவமான ஜமீன் குடும்பம் ஆகும். சிறுவயதிலேயே தாயார் இந்திராணி அம்மையார் இறந்துவிட்டார். தேவரின் தாயின் மரணத்திற்கு பிறகு அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் கல்லுப்பட்டியில் உள்ள அவரது பாட்டி பார்வதியம்மாளின் கவனிப்பில் தான் வளர்ந்தார்.

கல்வி

முத்துராமலிங்கத் தேவரின் கல்வி கற்பதற்கான முழு பொறுப்பையும் அவரது குடும்ப நண்பரான குழந்தைசாமி பிள்ளை என்பவர் ஏற்றுக்கண்டு உதவி செய்தார். கமுதி என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார் தேவர். ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு திருப்பரங்குன்றத்தில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இறுதியாக மதுரை நகரில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தேவருக்கு எதிர்பாராத உடல் நல குறைவு ஏற்பட்டு விட்டது.  இதன் காரணத்தால் அவரது பள்ளிப்படிப்பை முழுவதுமாக முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. 

அரசியல் 

சுதந்திரம் போராட்டம்

1927ஆம் ஆண்டு ஒரு குடும்ப வேலை காரணமாக சென்னை செல்லவேண்டிய கட்டாயம் முத்துராமலிங்கத் தேவருக்கு வந்தது. இந்த தருணத்தில் சென்னையில் மாபெரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. தேசம் முழுவதிலும் இருந்து பல முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்கள். அந்த மாபெரும் கூட்டத்தை பார்வையாளராக காணும் வாய்ப்பு முத்துராமலிங்கத் தேவருக்கு கிடைத்தது. கூட்டத்தில் பேசிய முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் எழுச்சியூட்டும் பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் தேவர். அந்த நாளிலிருந்து தனது வாழ்வை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார் முத்துராமலிங்கத்தேவர். அப்போது தான் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் வாழ்வைத் தொடங்கினார் முத்துராமலிங்கத்தேவர். 

தேவர் - நேதாஜி நட்பு

Muthuramalinga Thevar and Nethaji

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு முத்துராமலிங்கத் தேவருக்கு கிடைத்தது. தேவரின் தன்னலமற்ற தேசப்பற்றையும், தெய்வ பக்தியையும் கண்டு வியந்து போனார் நேதாஜி. சென்னையிலிருந்து சொந்த ஊரான கல்கத்தாவிற்கு செல்லும்போது முத்துராமலிங்கத் தேவரையும் தன்னோடு அழைத்துச் சென்றார் நேதாஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவுகடந்த பற்றும், பாசமும் வைத்திருந்தார் தேவர்.

தேவர் நேதாஜி

மாநில தேர்தல் 

1937 ஆம் ஆண்டு மாநில தேர்தல் நடைபெற்றது. நீதிக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் மன்னரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் தேவர். இந்த தேர்தலில் நீதிக் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார் முத்துராமலிங்கத்தேவர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆங்கிலேயே அரசின் சாதிய அடக்குமுறை சட்டமான 'குற்றப்பரம்பரை' என்ற சட்டத்தை நீக்கும் என்று நினைத்த தேவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது தேவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும்,  பட்டாபி சீதாராமயா அவர்களுக்கும் இடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி நடந்தது. இந்த போட்டியில் நேதாஜி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார் முத்துராமலிங்கத்தேவர். நாட்டின் தென் பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குகளை நேதாஜிக்கு ஆதரவாக திரட்டினார் தேவர். ஆனால் மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த தேர்தலில் இருந்து விலகினார் நேதாஜி. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 'அகில இந்திய பார்வர்டு பிளாக்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். முத்துராமலிங்கத் தேவரும் காங்கிரஸில் இருந்து விலகி பார்வர்ட் பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

1956 பொது தேர்தல் 

1956-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி என இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார் தேவர். மக்களின் பெரும் ஆதரவோடு இந்த இரு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றார் அவர். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு மும்முரமாக நாடாளுமன்ற உறுப்பினர் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.

கடைசி தேர்தல்

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதியிலும் முத்துராமலிங்க தேவர் போட்டியிட்டார். மக்களின் நிரந்தரமான ஆதரவு அவருக்கு இருந்ததால்,  இந்த தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார் தேவர். இந்தத் தேர்தல் தான் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி தேர்தலாகும். இந்த தேர்தல் சமயத்திலேயே முத்துராமலிங்கத் தேவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட உடல்நலக்குறைவு காரணமாக நாடாளுமன்றத்திற்கு தேவரால் செல்ல முடியவில்லை.

மறைவு

இந்தச் சூழலில் தேவரின் உடல் நிலை மேலும் மோசமானது. 1963ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மண்ணுலகை விட்டு பிரிந்து இறைவனின் திருவடிகளை அடைந்தார். அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அவர் நமக்கு வழிகாட்டிய தேசப்பற்றும்,  தெய்வபக்தியும் நம் தேசத்தின் இளைஞர்களை என்றென்றும் எழுச்சியூட்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தன்னலமின்றி இந்த தேசத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முத்துராமலிங்க தேவர் அவர்களை தமிழ் மக்கள் ஒரு தெய்வமாகவே இன்றளவும் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி, முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊரான பசும்பொன் என்ற இடத்தில் தேவர் குருபூஜை ஒரு பெரும் திருவிழா போன்று விமர்சையாக நடந்து வருகிறது.

தான் வாழ்ந்த காலத்தில் மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து, மறைந்த பின்பும் தெய்வமாக போற்றப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உயர்ந்த கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்றி நம் பாரத தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்ல உறுதியேற்போம்! 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இக்கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் இந்த கட்டுரையை பகிருங்கள். நன்றி!

Post a Comment

0 Comments

.